அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்
அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்
UPDATED : ஜூலை 15, 2025 10:22 AM
ADDED : ஜூலை 15, 2025 02:47 AM

சென்னை: அரசு துறைகளின் தகவல்கள் மற்றும் திட்டங்களை, செய்தி ஊடகங்களுக்கு எடுத்துரைக்க, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் குறித்து, செய்தி ஊடகங்கள் வாயிலாக சரியான நேரத்தில் பொது மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை செயலர் தீரஜ்குமார், வருவாய் துறை செயலர் அமுதா ஆகியோர் தான் அவர்கள்.
ராதாகிருஷ்ணனுக்கு எரிசக்தி, மக்கள் நல்வாழ்வு, போக்குவரத்து, கூட்டுறவு, வெளிநாடு வாழ் தமிழர் நலன், பள்ளிக்கல்வி, உயர் கல்வி, கைத்தறி, மனிதவள மேலாண்மை போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ககன்தீப் சிங் பேடிக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், வேளாண்மை, நீர்வளம், சுற்றுச்சூழல், வனம், குறு, சிறு தொழில்கள், தொழில், இயற்கை வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தீரஜ்குமாருக்கு உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அமுதாவிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், வீட்டுவசதி, நெடுஞ்சாலை, சுற்றுலா, அறநிலையத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு துறைகளின் செயலர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை, இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வழங்குவர். அந்த செய்திகளின் உண்மை தன்மையை உறுதி செய்த பின், தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவர்.
அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்திலும் மக்களிடம் கொண்டு சேர்க்கவே, அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.