ADDED : ஜூலை 17, 2025 12:28 AM
சென்னை:த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளித்த புகார் தொடர்பாக, நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆதவ் அர்ஜுனா. நடிகர் விஜய் கட்சியில், தேர்தல் பிரசார மேலாண்மை செயலராக உள்ளார்.
இவரது அலுவலகம், சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்துாரிரங்கன் சாலையில் உள்ளது. அப்பகுதியில், மர்ம நபர்கள், கடந்த 10ம் தேதி, ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்து சென்றதாக, ஆதவ் அர்ஜுனா சார்பில், அவரது வழக்கறிஞர்கள், சென்னை தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார், ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அருகே உள்ள, 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர், கணேசன் மற்றும் சென்னையில் தங்கி இருந்த, கர்நாடகாவை சேர்ந்த மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இவர்கள், சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' வெளியிட, ஆட்டோவில் சென்று வந்ததாகக் கூறி உள்ளனர். விசாரணை நடக்கிறது.