ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; சாப்ட்வேர் இன்ஜினியர்கள் 4 பேர் உயிரிழப்பு
ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; சாப்ட்வேர் இன்ஜினியர்கள் 4 பேர் உயிரிழப்பு
ADDED : அக் 12, 2025 11:13 PM

ஓசூர்; ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கோர விபத்தில், சேலம் மற்றும் ஈரோடை சேர்ந்த மூன்று சாப்ட்வேர் இன்ஜினியர்கள் நான்கு பேர் பலியாகினர்.
ஈரோடு, முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதன்குமார், 28; சாப்ட்வேர் இன்ஜினியர். கனடா நாட்டில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஸ்ருதி, 26; இருவருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மாதத்துக்கு முன் கனடாவில் இருந்து ஸ்ருதி ஈரோடு வந்தார்.
விமான நிலையம்
தலை தீபாவளி கொண்டாட, கனடாவில் இருந்து மதன்குமார் இந்தியா வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு வந்தார்.
பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றும், மதன்குமார் நண்பர்களான சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி மணிவண்ணன், 27, கொண்டப்பநாயக்கன்பட்டி கோகுல், 28, ஓமலுார் சொலவடை பச்சகவுண்டனுாரை சேர்ந்த முகிலன், 30, ஆகியோர் 'ஹூண்டாய் கிரெட்டா' காரில் விமான நிலையம் சென்று மதன்குமாரை அழைத்துக் கொண்டு ஈரோடு புறப்பட்டனர்.
மணிவண்ணன் காரை ஓட்டினார். பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது, ஈச்சர் லாரி ஒன்று, முன்னால் சென்ற வாகனம் மீது மோதி நிற்கவே, அதன் மீது கன்டெய்னர் லாரி, கார், ஒரு பிக் - அப் வேன் ஆகியவை அடுத்தடுத்து மோதியபடி நின்றன. இந்த வேன் மீது சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வந்த கிரெட்டா கார் மோதியது.
நொறுங்கிய கார்
இவர்கள் சுதாரிப்பதற்குள், மாலுாரில் இருந்து உல்லட்டிக்கு பழைய பேப்பர் ஏற்றி சென்ற லாரி, காரின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில், பிக் -அப் வேன் மற்றும் லாரிக்கு இடையில் சிக்கி, அப்பளம் போல கார் நொறுங்கியதில் நான்கு பேரும் உடல் சிதைந்து பலியாகினர்.
ஹட்கோ போலீசார், பிற வாகனங்களை அகற்றி, சடலங்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவை சேர்ந்த லாரி டிரைவர் கிரீஸ், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் பலியான முகிலன், யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆக., மாதம் நடந்த மெயின் தேர்வை எழுதியிருந்தார். அடுத்த மாதம் இதற்கான முடிவு வெளியாகவிருந்த நிலையில் விபத்தில் பலியாகி விட்டார்.