ஜெகன்மூர்த்தியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைப்பு
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைப்பு
ADDED : ஜூன் 28, 2025 10:31 PM
சென்னை:காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நான்கு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவர், காதல் திருமணம் செய்தார்.
இதுதொடர்பாக, அவரது தம்பி கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாற்றம்
பின், இந்த வழக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி மனுதாக்கல் செய்தார்.
அவரது மொபைல் போன் உரையாடல்கள் வாயிலாக, கடத்தல் வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது எனக்கூறி, அவருக்கு முன்ஜாமின் வழங்க, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதையடுத்து, எந்நேரமும் ஜெகன்மூர்த்தி கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.
அவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. முன்ஜாமின் மறுக்கப்பட்டதும், அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது.
டில்லிக்கு ஓட்டமா?
எனவே, அவரை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். ஜெகன்மூர்த்தி டில்லி சென்று விட்டதாக கூறப்படுவதால், அதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.