ஆசிரியர் கல்வியியல் பல்கலை அங்கீகாரம் வழங்கியதில் மோசடி?
ஆசிரியர் கல்வியியல் பல்கலை அங்கீகாரம் வழங்கியதில் மோசடி?
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 11:44 PM
சென்னை: அறப்போர் இயக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், 2023 – 24 மற்றும் 2024 – 25ம் கல்வியாண்டு, தனியார் கல்லுாரிகளின் இணைப்பு அங்கீகாரத்திற்கு, ஆய்வு மேற்கொண்டதில் மோசடி நடந்திருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியே தெரிய வந்துள்ளது.
ஆய்வுக்குழுத் தலைவர் ராஜகுமார், கடந்த 2023, மார்ச் 29ல் பெரம்பலுார், திருவள்ளூர், துாத்துக்குடி, திருச்சி ஆகிய கல்லுாரிகளில், ஆய்வு செய்ததாக பதிவுகள் உள்ளன.
இந்த கல்லுாரிகளுக்கு இடையிலான பயண நேரம் 11 மணி நேரம். ஒரே நாளில் 5 கல்லுாரிகளில் ஆய்வு செய்தது எப்படி?
மேலும், ஒரே பெயர் மற்றும் பெயரின் முதல் எழுத்துக்களை கொண்ட 37 பேராசிரியர்கள், பல்கலை அங்கீகரித்த பேராசிரியர் பட்டியலில், 222 இடங்களில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், போலி பேராசிரியர்களாக இருக்க வாய்ப்புள்ளது. கவர்னர், முதல்வர், அமைச்சர் ஆகியோர், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
