UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 11:52 PM
சென்னை: விடுதிக்குள் நள்ளிரவு புகுந்து, பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பார்த்திபன், 50, என்ற சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை, ஜெ.ஜெ.நகரில் உள்ள பெண்கள் விடுதியில், கடந்த 26ம் தேதி, அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணிடம் சில்மிஷத் தில் ஈடுபட்டார். அப்பெண் சத்தமிடவே, அந்நபர் அங்கிருந்து தப்பினார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார், அப்பகுதியில் உள்ள ‘சி.சி.டி.வி’யில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
இதில், பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது, சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் பார்த்திபன், 50, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், உதவி பொறியாளர் பார்த்திபனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
