'சினேகம்' பவுண்டேஷன் பெயரில் மோசடி: நடிகை ஜெயலட்சுமி கைது
'சினேகம்' பவுண்டேஷன் பெயரில் மோசடி: நடிகை ஜெயலட்சுமி கைது
ADDED : பிப் 21, 2024 06:11 AM

சென்னை: சினிமா பாடலாசிரியர் சினேகனின், 'சினேகம் பவுண்டேஷன்' என்ற பெயரில், பண மோசடி செய்ததாக, நடிகையும், பா.ஜ., மாநில நிர்வாகியுமான ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகன், 44; சினிமா பாடலாசிரியர். இவர், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகரில், மனைவி கன்னிகாவுடன் வசித்து வருகிறார். இவர், 2022 ஆக., 5ல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தான் நடத்தி வரும், 'சினேகம் பவுண்டேசன்' என்ற அறக்கட்டளை பெயரை, பா.ஜ., மாநில மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வருகிறார்' என, கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து, அதே மாதம், 9ம் தேதி நடிகை ஜெயலட்சுமியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சினேகன் தன் மீது பொய் புகார் அளித்துள்ளார்' என்று கூறியிருந்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, இருதரப்பிலும் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, இருவர் மீதும் சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், சினேகன் முன்ஜாமின் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, திருமங்கலம் போலீசார், நேற்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, சென்னை அண்ணா நகர் மேற்கு மேற்கு பகுதியில் உள்ள, ஜெயலட்மியின் வீட்டில் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, போலீசாரிடம் ஜெயலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சோதனையின் போது, வங்கி கணக்குள் உட்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஜெயலட்சுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் கைது செய்யப் பட்டார்.

