'ஆன்லைன்' முதலீடு விளம்பரம் செய்து பெண்களை ஏமாற்றிய மோசடி நபர் கைது
'ஆன்லைன்' முதலீடு விளம்பரம் செய்து பெண்களை ஏமாற்றிய மோசடி நபர் கைது
ADDED : டிச 13, 2024 01:47 AM

சென்னை:சமூக வலைதளங்களில், 'ஆன்லைன்' முதலீடு தொடர்பாக விளம்பரம் செய்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, கைதான கேரள வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலம்
கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் அருகேயுள்ள காயாம்குளம் பகுதியை சேர்ந்தவர் அன்வர்ஷா, 43. இவர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, 35 வயது ஆசிரியரிடம், 'பேஸ்புக்' வாயிலாக, ஆன்லைன் முதலீடு தொடர்பாக ஆசை காட்டி, 53 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, அன்வர்ஷாவை நேற்று கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:
இணையவழியில் பண மோசடி செய்வதற்காக, பழைய இரும்பு பொருட்கள் விற்பனை நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு துவக்கினேன். பின், ஆன்லைன் முதலீடு தொடர்பாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்பு எண்களுடன் விளம்பரம் செய்தேன்.
கேள்விகள் கேட்பர்
பெரும்பாலும், பெண்களே முதலீடு தொடர்பாக கேள்விகள் எழுப்புவர். அவர்களிடம், நான் ஏற்கனவே முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தது போல தயாரித்த, வங்கி கணக்கு விபரங்களை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன்.
அவர்களும் குறுகிய காலத்தில் அதிகளவில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்பர்.
அதற்கெல்லாம் பதில் அளித்து, அவர்களிடம் கோடீஸ்வரராகும் ஆசையை வளர்த்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

