சர்வே எண் உட்பிரிவுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக மோசடி; சார் - பதிவாளர்கள் மீது குவியும் புகார்கள்
சர்வே எண் உட்பிரிவுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக மோசடி; சார் - பதிவாளர்கள் மீது குவியும் புகார்கள்
ADDED : நவ 11, 2024 04:18 AM
சென்னை : புதிதாக வீட்டு மனைகள் வாங்குவோரிடம், சர்வே எண் உட்பிரிவுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, சார் - பதிவாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, வீடு, மனைகள் விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், சர்வே எண் வாரியாக நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்துள்ளது.
புதிதாக மனைப்பிரிவு திட்டங்களை உருவாக்கும் போது, அந்த நிலங்களுக்கு ஏற்கனவே இருந்த வகைபாட்டுக்கான வழிகாட்டி மதிப்பு இருக்கும். அந்த நிலம் தற்போது புதிய மனைப்பிரிவாக மாறும் போது, அதற்கான மதிப்பு புதிதாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அமலுக்கு வரும்
இதுதொடர்பான கோப்புகளை, சார் - பதிவாளர்கள் மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்புவர். அவர்கள் இதற்கான புதிய மதிப்பை நிர்ணயிப்பர். இதன்படி, ஒரு மனைப்பிரிவுக்கு புதிய வழிகாட்டி மதிப்புகள் அமலுக்கு வருகின்றன.
அதனால், அந்த மனைப்பிரிவுக்காக எடுக்கப்பட்ட நிலங்களின் சர்வே எண்களை குறிப்பிட்டு தான், புதிய வழிகாட்டி மதிப்புகள் இருக்கும்.
அந்த மனைப்பிரிவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மனைகளுக்கும், இந்த வழிகாட்டி மதிப்புகள் பொருந்தும். இதன்படியே, பத்திரங்களை பொதுமக்கள் பதிவுக்கு தாக்கல் செய்கின்றனர்.
இந்த பத்திரங்களில் குறிப்பிடப்படும் சர்வே எண்ணின் புதிய உட்பிரிவுகளுக்கு, வழிகாட்டி மதிப்பு இணையதளத்தில் இல்லை எனக்கூறி, சில சார் - பதிவாளர்கள் புதிய மோசடியில் இறங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வீடு, மனை வாங்குவோர் கூறியதாவது:
மனைப்பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு, அதில் உருவாகும் அனைத்து உட்பிரிவுகளுக்கும் பொருந்தும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு உட்பிரிவுக்குமான மதிப்புகளை, பதிவேற்றம் செய்வது சார் - பதிவாளரின் வேலை.
இந்த இடத்தில், உங்களுக்காக புதிய மதிப்பு நிர்ணயிக்க வேண்டியுள்ளது. அதற்கு மாவட்ட பதிவாளரிடம் சென்றால் அதிகம் செலவாகும், பதிவும் தாமதமாகும் என்று, சார் - பதிவாளர்கள் கூறுகின்றனர்.
வாக்குவாதம்
இது, பொது மக்களை ஏமாற்றும் அப்பட்டமான மோசடி. ரியல் எஸ்டேட் நிறுவன பிரதிநிதிகள் உடன் வந்து, சார் - பதிவாளரிடம் வாக்குவாதம் செய்தால் மட்டுமே, இயல்பான முறையில் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக, சார் - பதிவாளர்கள் மீது, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பி வருகிறோம். பதிவுத்துறை மேலதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மனைப்பிரிவுகளில், உட்பிரிவுக்கு தனியாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் நடைமுறை எதுவும் இல்லை. மதிப்பு நிர்ணயிப்பதாக சார் - பதிவாளர்கள் கூறுவதை, பொது மக்கள் நம்ப வேண்டாம்' என்றார்.