பஸ்சில் இலவச பயணம்: போலீசாருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
பஸ்சில் இலவச பயணம்: போலீசாருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
ADDED : நவ 30, 2024 12:40 AM

சென்னை: அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், 'போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்' வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று, கடந்த 2021ல் அறிவித்தார்.
இத்திட்டம் ஏட்டளவிலேயே இருந்தது. இதற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டும், போலீசாருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான விபரங்களை, டிச., 16க்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

