ADDED : மார் 27, 2025 12:43 AM
ஈரோடு;'இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணிக்கான கூலியை உயர்த்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலர் வேலுசாமி அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகத்தில், 5.4 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன.
அரசின் இலவச வேட்டி, சேலை தயாரிப்பால், 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்கத்தில் உள்ள, 68,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் பயன் பெறும்.
கடந்த, 2010-11ல் இலவச வேட்டிக்கு, 16 ரூபாய், சேலைக்கு, 28.16 ரூபாய் கூலி நிர்ணயிக்கப்பட்டது. 2019ல் வேட்டிக்கு, 24 ரூபாய், சேலைக்கு, 42.01 ரூபாயாக உயர்த்தினர்.
அதன் பிறகு ஆறு ஆண்டுகளாகியும் கூலி உயரவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கை எண், 146ல் தெரிவித்தபடி கூலியை, 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
தொழிலாளர் ஊதியம், கிடங்கு வாடகை, மின் கட்டணம், விசைத்தறி உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என, அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, 30 சதவீத கூலியை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.