ADDED : அக் 26, 2024 08:31 PM
சென்னை:தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளி கட்டடம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிக்கு, இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஜாலிப்புதுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன். ஜாலிப்புதுார் ஊராட்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் கட்ட, தனக்குச் சொந்தமான 80 சென்ட் விவசாய நிலத்தை, அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
அதனால், அந்த விவசாயி தற்போது குடியிருக்க வீடு இல்லாமல், ரேகடஹள்ளி அகரம் மருத்துவமனையில், இரவு காவலராகப் பணியாற்றி, அங்கேயே தங்கி வருகிறார். இந்த செய்தியை அறிந்த முதல்வர் ஸ்டாலின், விவசாயி முருகேசனுக்கு வீட்டுமனை வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, விவசாயி முருகேசன் குடியிருக்க, ரேகடஹள்ளி கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய பட்டாவை, பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.