' ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச ஸ்கூட்டர் '
' ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச ஸ்கூட்டர் '
ADDED : மார் 21, 2025 12:35 AM
சென்னை:''ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு, பக்கவாட்டு இருக்கை கொண்ட இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - இனிகோ இருதயராஜ்: அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள், மூளை, தசை சிதைவு குறைபாடுள்ள நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்ல சிரமப்படுகின்றனர்.
இது போன்ற பெற்றோருக்கு, பக்கவாட்டு இருக்கை கொண்ட இணைப்பு சக்கரம் பொருத்திய, பெட்ரோல் அல்லது பேட்டரி ஸ்கூட்டர்களை வழங்க வேண்டும்.
அமைச்சர் கீதா ஜீவன்: ஆட்டிசம், தசை சிதைவு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கு, இணைப்பு சக்கர ஸ்கூட்டர் வழங்குவது குறித்து, முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகை குழந்தைகளுக்கு, ஏற்கனவே பேட்டரி பொருத்தப்பட்ட 'வீல் சேர்' வழங்கப்பட்டு உள்ளது.
அவர்களது பெற்றோர் தொழில் துவங்க, முதல்வர் தான் முதல்முதலில் தையல் இயந்திரங்களை வழங்க உத்தரவிட்டார். அரசு பணியிடங்களில், 1,200 மாற்றுத் திறனாளிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வு, சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.