ADDED : அக் 19, 2024 03:08 AM

சென்னை:புதிதாக துவங்கிய, 130 சொகுசு மாநகர பஸ்களிலும், பெண்கள் இலவச பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
'நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டம், தமிழகத்தில் அமலில் உள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 9000 நகர பஸ்களில் 7300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னையில் 1559 சாதாரண கட்டண பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
நகர்ப்புறங்களில், 'ஒயிட் போர்டு' பஸ்களிலும், கிராமப்புறங்களில் நகர பஸ்களிலும், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். தமிழகம் முழுதும் தினமும் சராசரியாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர்பயணித்து வருகின்றனர்.
இதனால், அரசு பஸ்களில் பெண் பயணியர் எண்ணிக்கை, 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சென்னையில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள நீல நிற சொகுசு பஸ்களிலும், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சாதாரண கட்டண பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனால், பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நீல நிறத்தில் இருக்கும், 130 புதிய சொகுசுபஸ்களிலும், பெண்கள் இலவச பயண திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள், 'மகளிர் விடியல் பயணம்' என பெயரிடப்பட்டு இருக்கும். இந்த வகை பஸ் சேவை துவங்கிய போது, சொகுசு பஸ்களாக இயக்கப்பட்டன. தற்போது, சாதாரண கட்டண பஸ்களாவே இயக்கி வருகிறோம்.
சென்னையை போல, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களிலும், நீல நிற டவுன் பஸ்களில் கணிசமான அளவுக்கு, 'மகளிர் விடியல் பயண பஸ்கள்' இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், சிவப்பு நிற சொகுசு மற்றும், 'ஏசி' வகை பஸ்களில், பெண்கள் இலவச பயண திட்டம்விரிவுப்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர்கள்கூறினர்.