மத்திய, மாநில ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை
மத்திய, மாநில ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை
ADDED : செப் 26, 2024 02:03 AM
சென்னை:''கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நீதிபதிகள், எம்.பி.,க்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, இலவச சிகிச்சை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, கிண்டி யில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான 'பேட்டரி' வாகனங்களை நேற்று, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
காப்பீடு
பின், அமைச்சர் அளித்த பேட்டி:
இந்த மருத்துவமனையில், ஓராண்டில் 3.37 லட்சம் புறநோயாளிகள்; 1.02 லட்சம் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். புறநோயாளிகள் எண்ணிக்கையும், 1,300ல் இருந்து, 1,500 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன் பெறும் வகையில், அரசு மருத்துவமனைகளில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு முன், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தி வந்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், இனி அரசு மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம்.
மைல்கல்
அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், முதல் மருத்துவமனையாக, இங்கு, அரசு ஊழியர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம்.
அதேபோல், நீதிபதி கள், எம்.பி.,க்கள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும், இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது, தமிழக மருத்துவ துறை வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.