ADDED : ஜன 28, 2025 12:35 AM

மதுரை : போக்சோ வழக்கில், வடுகபட்டியைச் சேர்ந்த பெயின்டரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, மேல்முறையீடு செய்ததில் அவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்தது.
தேனி மாவட்டம், வடுகபட்டியைச் சேர்ந்தவர் சரவணன், 38, பெயின்டர். சிறுமியுடன் இவர் நெருக்கமாக பழகியதில் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்ய சரவணன் மறுத்து விட்டதாகக் கூறி, சிறுமி 2017ல் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
தென்கரை போலீசார் போக்சோ சட்டப்பிரிவில், அந்த பெயின்டர் மீது வழக்கு பதிந்தனர். அவரை, தேனி மகளிர் விரைவு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிறுமியின் தாய், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. சரவணனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த மூன்று மாத கரு மற்றும் சரவணனின் மரபணுவை பரிசோதித்ததில் ஒத்துப்போகிறது. சரவணன் குற்றவாளி என இந்த நீதிமன்றம் முடிவு செய்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது. இவ்வாறு உத்தரவிட்டனர். போலீசார், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

