கடனை திருப்பி கேட்ட நபரை காரை ஏற்றி கொன்ற 'நண்பன்' மதுராந்தகத்தில் கொடூரம்
கடனை திருப்பி கேட்ட நபரை காரை ஏற்றி கொன்ற 'நண்பன்' மதுராந்தகத்தில் கொடூரம்
ADDED : ஏப் 17, 2025 06:51 AM

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்பாபு, 45; மின் வாரிய ஒப்பந்த ஊழியர். மங்கலம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ், 30; தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இருவரும் நண்பர்கள்.
சரத்பாபு, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிவராஜ் தன் காரை வேகமாக ஓட்டி வந்து, சரத்பாபு மீது பயங்கரமாக மோதி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சரத்பாபுவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் சரத்பாபு உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த படாளம் போலீசார், சிவராஜை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சிவராஜுக்கு, சில ஆண்டுகளுக்கு முன் சரத்பாபு நான்கு லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். துவக்கத்தில் முறையாக வட்டி செலுத்தி வந்த சிவராஜ், கடந்த சில மாதங்களாக வட்டி கொடுக்கவில்லை.
இதனால், கொடுத்த பணத்தை சரத்பாபு திருப்பி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சிவராஜ், நேற்று சரத்பாபு மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார். அவரை கைது செய்துஉள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.