தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இனி நட்பு தான்: உயர் கல்வி துறையின் புதிய அமைச்சர் உறுதி
தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இனி நட்பு தான்: உயர் கல்வி துறையின் புதிய அமைச்சர் உறுதி
UPDATED : அக் 11, 2024 06:52 AM
ADDED : அக் 11, 2024 03:18 AM

சென்னை, தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே இனி நட்பு தான்; இரு தரப்புக்கும் இடையே மோதல் இருக்காது என, உயர் கல்வித் துறையின் புதிய அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
தமிழகத்தில் உயர் கல்வி யின் தரத்தை உயர்த்துவது, 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவது குறித்து, உயர் கல்வித் துறை அதிகாரிகளுடன், அமைச்சர் கோவி.செழியன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன்பின், அவர் அளித்த பேட்டி: உயர் கல்வித் துறை அறிவிப்புகளின் தற்போதைய நிலையை அறியவும், துறையின் நிறை, குறைகளை அறியவும், உயர் அதிகாரிகள் உடனான இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் உயர் கல்வியை தொடரும் வகையில், 'புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அவற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டப் படிப்பை முடித்து பணி வாய்ப்புகளை பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வழிகாட்டவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன். கல்லுாரி மாணவர்கள் நல்ல ஆற்றலும், தனித்திறமையும் பெற்று, மற்ற மாநிலங்களை விட, சிறந்த கல்விக் கொள்கை உள்ள மாநிலம் தமிழகம் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர்களை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பல்கலைகளில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை நிரப்புவது, பதிவாளர், கண்காணிப்பாளர் நியமனம், கல்லுாரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். கல்லுாரி பருவம், 'ஹீரோ' மனப்பான்மையும், குழு மனப்பான்மையும் உள்ள பருவம். அதில், ஒருமித்த கருத்துக்களை ஏற்படுத்தவும், வேற்றுமைகள் ஏற்படாத வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளோம்.
சென்னையில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையில் நடக்கும் மோதல் போக்குகளை நீக்க, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர்களுடன் பேசி உள்ளோம். மாணவர்களின் போக்குகளை கூர்ந்து கவனித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்ட அறிவுறுத்தி உள்ளோம். இனி, தமிழகம் முழுதும் உள்ள பல்கலைகள், கல்லுாரிகளில், நானே திடீர் கள ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளேன். அப்போது, ஆங்காங்கே உள்ள பிரச்னைகளை அறிந்து, அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
'தமிழக அரசு, கல்வித் துறை சார்ந்த விஷயங்களில் சட்டப்படி சரியாகவே நடக்கிறது. மாணவர்களின் நலனுக்காக, கவர்னருடன் நல்லுறவில் ஈடுபட்டு, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். துணை வேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றில், ஏற்கனவே உள்ள சில விதிகளில், கவர்னர் முரண்பட்டிருந்தார். அவற்றை சரி செய்ய, அனுபவம் மிக்க அதிகாரிகளுடன் ஆலோசிப்போம். கவர்னருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.