ADDED : ஜூன் 21, 2025 01:50 AM
சென்னை:'பள்ளி, கல்லுாரிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கு, 'ஆன்லைன்' வழியாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும்' என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பெண்கள் விடுதிகள், தொழில் நிறுவனங்களில் உரிய முறையில் சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய, சுகாதார சான்றிதழ்கள் அரசால் வழங்கப்படுகின்றன.
அதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டு, 'ஆன்லைன்' வழியாக, சான்றிதழ் பெறும் வசதி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சான்றிதழ் பெற, https://www.tnesevai.tn.gov இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. சுகாதார சான்றிதழ்களுக்கு, தேவையான ஆவணங்களையும், சுய உறுதிமொழி சான்றிதழையும், 'ஆன்லைன்' வழியே சமர்ப்பிக்க வேண்டும். கணினியில் சுகாதார சான்று உருவாக்கப்படும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சான்றிதழை அச்சு பிரதி எடுத்து, தொழில், கல்வி வளாகத்தில் காட்சிப்படுத்தி இருப்பது அவசியம். சுகாதார சான்றிதழில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது கள ஆய்வில் கண்டறியப்பட்டால், சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.