இனி எப்போதும் நம்ம ஆட்சி தான்! கடிதத்தில் ஸ்டாலின் உற்சாகம்
இனி எப்போதும் நம்ம ஆட்சி தான்! கடிதத்தில் ஸ்டாலின் உற்சாகம்
ADDED : நவ 18, 2024 01:10 AM

சென்னை: 'வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பு அளிப்பதை 'ரோடு ஷோ' என்கின்றனர். அது, தி.மு.க., அரசின் திட்டங்களால் பயன்பெற்று வரும் மக்களின் திருவிழா கொண்டாட்டம்' என, கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது கடிதம்:
மாவட்டந்தோறும் கலந்தாய்வு என நாமக்கல்லில் அறிவித்தேன். கோவை, விருதுநகர் மாவட்டங்களில், நேரடி ஆய்வு நடத்தினேன். கடந்த 14, 15ம் தேதிகளில், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், நேரடி கள ஆய்வை மேற்கொண்டேன்.
இரண்டு மாவட்ட மக்களுக்கு, திட்டங்களை வழங்கி, கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தியது, மனதுக்கு பெரும் நிறைவை தந்தது.
சிறிய ஊரான ஜெயங்கொண்டத்தில், மிகச்சிறிய பயணியர் விடுதி உண்டு. அங்கு பலமுறை தங்கிய நினைவுகள் வந்து சென்றன.
சிறிய விடுதியாக இருந்தாலும், மனதுக்கு இனிய விடுதியாக இருந்தது. ஜெயங்கொண்டத்தில் மழை துாறலுக்கு இடையில், மக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.
காரில் இருந்தபடி கையைசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டேன். கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டேன்.
இன்றைய அரசியல் களத்தில் வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, 'ரோடு ஷோ'என்கின்றனர்.
'ஷோ' என்றால் காட்சிப் பொருளாகும். என்னை பொறுத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல; மக்கள் நமக்கு காட்சி பொருளுமல்ல. தி.மு.க., அரசின் நல்லாட்சிக்கு கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க., அரசின் திட்டங்களால் பயன்பெற்று வரும், மக்களின் திருவிழா கொண்டாட்டம்.
ஜெயங்கொண்டத்தில் இருந்து, அரியலுாருக்கு செல்லும் வழியெங்கும், மக்கள் திரண்டு நின்றனர். இனி எப்போதும் நம்ம ஆட்சிதான். தி.மு.க., ஆட்சி சூப்பர் என்றனர்.
நான், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து, 'நிச்சயம் 200 ஜெயிப்போம்' என, உற்சாக குரலுடன் உத்தரவாதம் அளித்தனர்.
மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசம் அடைந்தேன். மக்களுக்கான திட்டங்கள் சரியாக போய் சேர வேண்டியதை, கள ஆய்வுகள் வழியே உறுதி செய்வதன் அவசியத்தை உணர்ந்தேன்.
வரும் 28, 29ம் தேதிகளில், விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.