இனி, மணியடிச்சா தண்ணி குடிக்கணும்!: பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்
இனி, மணியடிச்சா தண்ணி குடிக்கணும்!: பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்
ADDED : ஜூன் 29, 2025 06:35 AM

கோவை: மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் செயல்பாடுக்கு வந்துள்ளது.
பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுகின்றனர். வெயிலின் தாக்கம் மற்றும் விளையாட்டு நேரங்களில் உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற சாத்தியங்கள் உள்ளன.
எனவே, அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, நீர்ச்சத்து குறைவை தடுக்கும் நோக்கத்துடன், பள்ளி நேரத்திலேயே மாணவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'வகுப்பறை நடவடிக்கைகளை பாதிக்காமல், தினமும் மூன்று முறை, காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என வாட்டர் பெல் அடிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க, 5 நிமிட இடைவேளையும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டம், முதற்கட்டமாக கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அரசு பள்ளி மாணவ மாணவியரின் ஆரோக்கியம் காக்கும் இந்த முயற்சி, தனியார் பள்ளிகளிலும் விரிவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.