நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி: வானிலை தகவல் வானிலை மையம் தகவல்
நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி: வானிலை தகவல் வானிலை மையம் தகவல்
UPDATED : ஜன 02, 2025 03:55 AM
ADDED : ஜன 01, 2025 10:28 PM

சென்னை:'நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது; பிற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டத்தில் நாலுமுக்கு, 16; காக்காச்சி, 15; மாஞ்சோலை, 13 செ.மீ., மழை பெய்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது; வரும், 7 வரை மிதமான மழை தொடரக்கூடும். வடக்கில் இருந்து குளிர் காற்று வீசுவது அதிகரித்துள்ளதால், இதில், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. பிற இடங்களில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். தென் மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.