கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் பஞ்சாபில் பிடிபட்டார்
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் பஞ்சாபில் பிடிபட்டார்
ADDED : மே 07, 2026 01:45 AM

புதுடில்லி: குத்துச் சண்டை வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டு மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
டில்லி நஜப்கர் நங்லி சக்ராவதியை சேர்ந்தவர் விகாஸ் தாகர் என்ற பிந்தா,38; குத்துச்சண்டை வீரர்.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றவர். கடந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி விகாஸ் தாகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து, பாபா ஹரிதாஸ் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
முன்பகை காரணமாக விகாஸ் தாகர் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார், விகாஸ் தஹியா (எ) சோனு தேக்கேதார், ஆகாஷ் கெலாட், கிருஷ்ணன் மற்றும் சுமித் ராணா ஆகிய நான்கு பேரை தேடினர்.
ஆகாஷ் கெலாட் முதலில் கைது செய்யப்பட்டார். ஆனால், மற்ற மூவரும் தலைமறைவாகினர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்.,18ம் தேதி, தலைமறைவாக உள்ள மூவரும் கொலைக் குற்றவாளிகள் என அறிவித்தது.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், முக்கியக் குற்றவாளி சோனு தேக்கேதார், ஏப்ரல் 12ம் தேதி சண்டிகரில் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், பஞ்சாப் மாநிலத்தில் பதுங்கியிருந்த சுமித் ராணா, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
