தமிழகத்தில் எஸ்.சி., துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவு: அ.தி.மு.க.,
தமிழகத்தில் எஸ்.சி., துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவு: அ.தி.மு.க.,
ADDED : ஏப் 27, 2025 01:50 AM
சென்னை: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தேன்மொழி குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் நேற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில், அவர் பேசியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தெலுங்கானாவில், 57,401 கோடி ரூபாய், அதாவது, 18.82 சதவீதம்; கர்நாடகாவில், 42,018 கோடி ரூபாய், அதாவது, 10.26 சதவீதம்; ஆந்திராவில், 22,440 கோடி ரூபாய், அதாவது, 8.85 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க., அரசு, 21,101 கோடி ரூபாய், அதாவது, 4.80 சதவீதம் மட்டுமே ஒதுக்கி, விளிம்பு நிலை மக்களை வஞ்சித்துள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, வேறு துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. எஸ்.சி., மக்களுக்கான நிதியை, அவர்களுக்கே செலவிட வேண்டும்.
தமிழக அரசு, 10 பல்கலைகளுக்கு புதிய துணை வேந்தர்களை நியமிக்கும் போது, இரண்டு பல்கலைகளுக்கு, எஸ்.சி., பிரிவைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் படிக்க, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிரத்யேக மருத்துவ கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் மருத்துவ கல்லுாரி துவங்க வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்க, மாவட்டம்தோறும் சிறப்பு வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க, தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

