'வருங்கால முதல்வரே' போஸ்டர் சர்ச்சை: பா.ஜ., மீது அ.தி.மு.க., கடும் எரிச்சல்
'வருங்கால முதல்வரே' போஸ்டர் சர்ச்சை: பா.ஜ., மீது அ.தி.மு.க., கடும் எரிச்சல்
ADDED : ஏப் 18, 2025 04:50 AM

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க முரண்டு பிடித்து வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷாவை சந்தித்து, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.
அப்போது, 'தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்கும்' என கூறினார். ஆனால், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது; ஆட்சியில் பங்கு என்பதற்கே வாய்ப்பில்லை' என பழனிசாமி அறிவித்தார். இந்த முரண்பாடு தொடர்பாக பேட்டியளித்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'கூட்டணி ஆட்சி குறித்து, தேர்தல் நெருக்கத்தில் இரு கட்சித் தலைவர்களும் பேசி முடிவெடுத்து அறிவிப்பர்' என சொல்லி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.
ஆனாலும், இந்த விஷயத்தை விடாத அ.தி.மு.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, 'தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிதான் அமையும்; பழனிசாமி தான் முதல்வராக பொறுப்பேற்பார். கூட்டணி ஆட்சி கிடையாது' என, பேட்டி அளித்தார். இதனால், கூட்டணி அமைந்து விட்டாலும், இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர் சர்ச்சையாகி உள்ளது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.,வுக்கு புதிய தலைவராகி இருக்கும் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான திருநெல்வேலியில், அவருடைய ஆதரவாளர்கள், அவரை வரவேற்றும், வாழ்த்தியும் 'வருங்கால முதல்வரே' என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது அ.தி.மு.க.,வினரை எரிச்சலடையச் செய்து இருக்கிறது.
- நமது நிருபர் -