மத்திய அரசு உதவியுடன் செய்யப்படும் சாலை திட்ட பணிகளில் தமிழகம் முதலிடம்
மத்திய அரசு உதவியுடன் செய்யப்படும் சாலை திட்ட பணிகளில் தமிழகம் முதலிடம்
UPDATED : அக் 02, 2024 04:24 AM
ADDED : அக் 02, 2024 02:54 AM

சென்னை:“மத்திய அரசு நிதியுதவியிலான சாலை உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது,” என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 65 இடங்களில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. சாலை அமைப்பு செலவை வசூலித்த சுங்கச்சாவடிகள், நகரப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை விலக்க வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு தொடர்வதற்கு, தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சியினர், உள்ளூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், 'தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை குறைக்கும் திட்டம் இல்லை' என தேசிய நெடுஞ்சாலை ஆணைய தமிழக மண்டல அதிகாரி வீரேந்தர் சாம்பியால் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில், டில்லியில் நடந்தது. இணை அமைச்சர் அஜய் தம்தா, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் “மத்திய அரசின் நிதியுதவியிலான சாலை உட்கட்டமைப்பு திட்ட பணிகளை செயல்படுத்துவதில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது,” என பாராட்டு தெரிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் வேலு, தமிழக கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:
சென்னை கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்ட சாலை, உயர்மட்ட சாலை பணிகளை விரைந்து துவக்க வேண்டும். செங்கல்பட்டு - உளுந்துார்பேட்டை சாலையை எட்டு வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும். திருவாரூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி - களியக்காவிளை சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணியை விரைவுபடுத்த வேண்டும். திருவண்ணாமலை மற்றும் பல்லடத்திற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
வள்ளியூர் - திருச்செந்துார் சாலை, கொள்ளேகால் - ஹானுார் சாலை, மேட்டுப்பாளையம் - பவானி சாலை, பவானி - கரூர் சாலையை நான்கு வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும்.
கோவை புறவழிச்சாலையை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட இடர்பாடுகளை களைவதற்கு ராணுவம், வருவாய், நீர்வளம், மின் வாரியம், வனம் உள்ளிட்ட துறைகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சில சுங்கச்சாவடிகளுக்கு கட்டண விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.