வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி 'சைபர்' அடிமைகளாக மாற்றும் கும்பல்
வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி 'சைபர்' அடிமைகளாக மாற்றும் கும்பல்
ADDED : டிச 07, 2024 01:43 AM

சென்னை,: வெளிநாடுகளில் கை நிறைய சம்பளம் என, கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று, சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தும் கும்பலை சேர்ந்தவர்களின் இணையதள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் இருந்து, லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு, 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கால் சென்டர்' வேலை, கை நிறைய சம்பளம் என, ஆட்களை முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். சமூக வலைதளம் வாயிலாக, அந்நாடுகளில் இருந்தும் விளம்பரம் வெளியிடுகின்றனர்.
அவற்றை நம்பி தொடர்பு கொள்ளும் நபர்களை, கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரவழைக்கின்றனர். 'இந்த வேலையில் சேர்வதால், உங்கள் வாழ்க்கை தரம் உயரப் போகிறது. கடன் இன்றி வாழப்போகிறீர்கள்' என்றெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்.
இவற்றை எல்லாம் நம்பிச் சென்றவர்களை, 'ஆன்லைன்' வாயிலாக பணம் மோசடி செய்யும், சைபர் குற்றவாளிகளாக மாற்றுகின்றனர். இவர்களை, 'சைபர் அடிமைகள்' என, வகைப்படுத்துகின்றனர். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறித்துக் கொள்வர். இதனால், அவர்களால் தப்பிக்க முடியாது.
இவர்களுக்கான வேலையே, சைபர் அடிமைகளாக இருந்து, தமிழகத்தில் உள்ள நபர்களிடம் பண மோசடி செய்வது தான். இதனால், வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல விரும்புவோர், இத்தகையை சட்ட விரோத முகவர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது போல, சைபர் அடிமைகளாக மாற்றும் போலி முகவர்கள் பயன்படுத்திய, 128 இணையதள முகவரி விபரங்களை, சென்னையில் செயல்படும் புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பாளர் அனுப்பி உள்ளார்.
அதன் அடிப்படையில், யு.ஆர்.எல்., எனப்படும் அந்த இணையதள முகவரிகள் முடக்கப்பட்டுஉள்ளன.
சட்ட ரீதியாக அனுமதி பெற்று, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவோர் குறித்த பட்டியல், வெளியுறவு அமைச்சகத்தின், www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. அதன் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.