திருத்தணி - திருப்பதி இடையே ரூ.61 கோடியில் எரிவாயு குழாய்கள்
திருத்தணி - திருப்பதி இடையே ரூ.61 கோடியில் எரிவாயு குழாய்கள்
ADDED : ஆக 26, 2025 03:57 AM
சென்னை : இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்காக, திருத்தணி - திருப்பதி இடையே, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பூமிக்கடியில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
பெட்ரோல், டீசல் உற்பத்திக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பதை தடுக்கவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.
இதற்காக, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுக வளாகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வாயிலாக, திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கிருந்து, திரவ நிலை எரிவாயு குழாய் வழித்தடத்தில், வீடுகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. வாகனங்களுக்கான, சி.என்.ஜி., நிரப்பும் மையங்களுக்கும், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், இயற்கை எரிவாயு குழாய் புதைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முதல் ஆந்திர மாநிலம் திருப்பதி வரை, 66 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக, எரிவாயு குழாய் புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான பணிகளை, 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்கிறது. தேசிய நெடுஞ்சாலை வழியாக, இந்த குழாய்களை எடுத்து செல்ல, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், இப்பணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது, இப்பணிகளை நேரடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

