ADDED : ஆக 23, 2026 10:56 PM
சென்னை: தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின், இ.கே.ஒய்.சி., எனப்படும், உண்மை சரிபார்ப்பு பணியை முடிக்க, நேற்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன. சிலிண்டர் வாங்கிய பின், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில், மத்திய அரசின் மானியத்தொகை செலுத்தப்படுகிறது.
இதற்காக, அவர்களின் உண்மை சரிபார்ப்பு பணி நடக்கிறது. அதன்படி, காஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் தனக்கு சிலிண்டர் வினியோகிக்கும் ஏஜென்சிக்கு சென்று அல்லது நிறுவனங்களின் மொபைல் போன் செயலியில், விபரங்களை பதிவு செய்வதன் வாயிலாக, உண்மை தன்மை சரிபார்க்கப்படுகிறது.
இந்த பணிகளை முடிக்க, நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டது. நேற்று அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
