பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை கனிமொழி கருத்துக்கு கீதா ஜீவன் பதில்
பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை கனிமொழி கருத்துக்கு கீதா ஜீவன் பதில்
ADDED : நவ 26, 2024 11:38 PM
சென்னை:'இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில், தமிழகம் முன்னிலையில் இருக்கிறது' என, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி, நேற்று முன்தினம் தி.மு.க., துணைப்பொதுச் செயலர் கனிமொழி வெளியிட்டுள்ள செய்தியில், 'வீடு துவங்கி வீதி வரை, சமூகத்தின் எல்லா தளங்களிலும், பெண்கள் மீதான வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது' என்று தெரிவித்துஇருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெண்களுக்கான உரிமைகளை காப்பது போலவே, அவர்களது கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில், தி.மு.க., அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், தங்களுடைய பணிகளை செய்வதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
இதனால் தான், பெண்கள் அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்கு செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர்.
மாநில அளவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் இயங்கி வருகிறது.
அதேபோல, 'ப்ராஜக்ட்' பள்ளிக்கூடம் திட்டம், இமைகள் திட்டம் போன்றவற்றின் வாயிலாக, பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அத்துடன் விரைவான நீதி கிடைக்க, அரசு செயலாற்றி வருகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகம், 2022ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, நாடு முழுதும் லட்சத்துக்கு, 65 என்றால், தமிழகத்தில், 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி, 4.6 என்ற அளவிலும் தமிழகத்தில், 0.7 அளவிலும் உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும், அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன், உறுதியான நடவடிக்கைகளை, எப்போதும் எடுத்து வருகிறது.
அதனால் தான், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில், தமிழகம் முன்னிலையில் இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

