விதிகளை மதிக்காமல் உதாசீனம் தலைமை செயலக சங்கம் எச்சரிக்கை
விதிகளை மதிக்காமல் உதாசீனம் தலைமை செயலக சங்கம் எச்சரிக்கை
ADDED : ஆக 13, 2025 03:54 AM
சென்னை: 'நகராட்சி நிர்வாகத்துறை விதிகளை மதிக்காமல், ஏதோ ஒரு காரணத்திற்காக, உதவி பிரிவு அலுவலர்களை உதாசீனப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்' என, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார்.
அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
நகராட்சி நிர்வாகத் துறையில், இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர் காலிப் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு நகராட்சி ஆணையர் சார்நிலை பணி விதிகள் உள்ளன.
அதன்படி துறையில் உள்ள, தலைமைச் செயலகப் பணியாளர்களை, காலி பணியிடங்களில் நியமிக்க வேண்டும். ஆனால், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை அநீதி இழைத்து உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, உதவிப் பிரிவு அலுவலர்களாக தேர்வு பெற்று, உயர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்துள்ள பணியாளர்களுக்கு, 13 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நிலை பதவி உயர்வுகூட கிடைக்காத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை விதிகளை மதிக்காமல், ஏதோ ஒரு காரணத்திற்காக உதவிப் பிரிவு அலுவலர்களை உதாசீனப்படுத்துவதை, தலைமைச் செயலக சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
எனவே, நகராட்சி நிர்வாகத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தலைமைச் செயலகப் பணியாளர்களின் நியாயமான பதவி உயர்வை, உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.