இழிவாக பேசுவது தான் தி.மு.க.,வின் மரபணு: அமைச்சர் ரமேஷ் காட்டம்
இழிவாக பேசுவது தான் தி.மு.க.,வின் மரபணு: அமைச்சர் ரமேஷ் காட்டம்
UPDATED : செப் 15, 2026 05:35 AM
ADDED : செப் 15, 2026 05:20 AM

திருச்சி: ''பிறரை இழிவாக பேசுவது தான் தி.மு.க.,வின் மரபணு'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.
திருச்சி மலைக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:
திரை உலகில் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித், லண்டனில் பங்கேற்ற கார் பந்தயத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்ததில் என்ன தவறு உள்ளது? எதையாவது விமர்சித்து கொண்டு இருப்பதால் தான், எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளனர்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தான் இன்னும் தொடர்கின்றன. அவற்றை சரி செய்து வருகிறோம்.
சிலர் அரசியல் செய்வதற்காக, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியது தவறல்ல.
ஆனால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதைத்தான் எதிர்க்கிறோம். பிறரை இழிவாக பேசுவது தி.மு.க.,விற்கு கைவந்த கலை; அதுதான் தி.மு.க.,வின் மரபணு.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை கோவிலில், மக்களோடு பொது வரிசையில் தரிசனத்துக்கு சென்றால் என்ன தவறு? அவரை கோவிலுக்குள் அழைத்து செல்லத்தான் அறநிலையத்துறை ஊழியர்கள் இருக்கின்றனரா?
கடந்த தி.மு.க., ஆட்சியில், தரிசனத்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்த மக்களை கேலி செய்த சேகர்பாபுவிற்கு, இப்போது தான் அந்த கஷ்டம் தெரிந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
