சிறுமி பலி: சி.பி.ஐ., விசாரணை கேட்டு தந்தை வழக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டு தந்தை வழக்கு
சிறுமி பலி: சி.பி.ஐ., விசாரணை கேட்டு தந்தை வழக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டு தந்தை வழக்கு
ADDED : ஜன 17, 2025 11:53 PM
சென்னை:விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில், கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக்கோரி, சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் சி.பி.ஐ., பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பழனிவேல், 34. இவரது மகள் லியா லட்சுமி, 4; அப்பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தார்.
கடந்த 3ம் தேதி, பள்ளியில் உணவு இடைவேளையின் போது, அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் சிறுமி லியா லட்சுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.
தாளாளர் கைது
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில், சந்தேக மரணம், பணியில் கவனக்குறைவு உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றக்கோரி, சிறுமியின் தந்தை பழனிவேல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறியுள்ளதாவது:
மருத்துவமனையில் மகள் அனுமதிக்கப்பட்டது குறித்து, பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. அதேபோல, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
கழிவு நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக, எந்த ஆதாரங்களும் இல்லை.
மகளின் பள்ளி சீருடை நனையவில்லை; உடையில் ரத்தக்கறை உள்ளது. பள்ளியில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.
என் மகள் மரணத்தில், பல சந்தேகங்கள் உள்ளதால், வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும்.
சம்பவம் நடந்த நாளில் பள்ளியில் பணியில் இருந்தவர்களின் மொபைல் அழைப்புகள் விபரங்களை ஒப்படைக்கவும், 'சிசிடிவி' பதிவுகளை பெற்று பாதுகாக்கவும், மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
சந்தேகம்
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.தினேஷ் ஆஜராகி, ''சிறுமி இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை மாற்ற வேண்டும். 'சிசிடிவி' காட்சிகளின் பதிவுகளையும், பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
போலீசார் தரப்பில், கூடுதல் அரசு வழக்கறிஞர் எஸ்.வினோத்குமார், ''இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் தர வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, 'இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த பின், அதுகுறித்து முடிவெடுக்கலாம்' என தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் சி.பி.ஐ., தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்., 4க்கு தள்ளி வைத்தார்.