சிறுமியை அடைத்து பலாத்காரம்: ரவுடிக்கு 10 ஆண்டு தண்டனை
சிறுமியை அடைத்து பலாத்காரம்: ரவுடிக்கு 10 ஆண்டு தண்டனை
ADDED : ஜன 13, 2024 08:01 AM

புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2018ல் திடீரென மாயமானார்; நான்கு நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அவரை விசாரித்ததில், அரியாங்குப்பம் ரவுடி ராஜ், 27, அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நண்பரின் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
அரியாங்குப்பம் போலீசார், ரவுடி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் வழக்கு நடந்தது; நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜுக்கு போக்சோ பிரிவில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, சிறுமியை கடத்தியதற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
நயன்தாராவுக்கு எதிராக மஹாராஷ்டிராவிலும் வழக்கு
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், கடவுள் ராமருக்கு எதிராகவும், ஹிந்து மதத்திற்கு எதிராகவும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிந்தனர். அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த மிரா பயேந்தர், போலீசில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் நயன்தாரா உட்பட படக்குழுவினர் எட்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். இரு பிரிவினரிடையே மோதலை துாண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, வழிபாட்டு தலத்தை அவமதிப்பது, கூட்டாக குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்தவர் டேவிட் மனோகரன். குலசேகரம் அருகே பொன்மனையில் மனைவி பெயரில் உள்ள சொத்தில் பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ரவியிடம் மனு செய்தார். அவர் ஒரு மாதமாக மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது சம்பந்தமாக கேட்டபோது சொத்து பெயர் மாற்றத்திற்கு 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ரவி கூறினார். இதுகுறித்து டேவிட் மனோகரன் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி டேவிட் மனோகரன் பணத்தை ரவியிடம் கொடுத்தார். அப்போது ரவியை போலீசார் கைது செய்தனர்.
சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 48. இவர், அதே பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
இவரிடம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், 2020ம் ஆண்டு மாதாந்திர சீட்டில் சேர்ந்து, மொத்தம் 5 லட்சம் ரூபாய் செலுத்தினார். முதிர்ச்சியடைந்த நிலையிலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் மகேந்திரன் அலைக்கழித்தார்.
அதுபோல, மேலும், ஏழு பேரிடம் 18 லட்சம் ரூபாயையும் தராமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், மோகன்ராஜ் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிந்து மகேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஐ.ஏ.எஸ். என கூறி திருமணம்: வாலிபர், பெற்றோர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்தவர் அகல்யா, 27, எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், நாமக்கல் டவுன் ஏ.எஸ்.பேட்டை, முல்லை நகரை சேர்ந்த ராஜா, 35, என்பவருக்கும், 2021 பிப். 24ல், பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு முன், ராஜா தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறியதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின், வேலைக்கு செல்லாமல் ராஜா வீட்டிலேயே இருந்தார். இதனால், சந்தேகமடைந்த அகல்யா, ராஜாவின் மொபைல் போனை ஆய்வு செய்தார்.
அப்போது தான், அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது; அகல்யாவை ராஜாவின் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர். உயிருக்கு பயந்த அகல்யா, மோகனுாரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து, இது தொடர்பாக, மோகனுார் போலீசில், கடந்த, 8ல் புகாரளித்தார்; தலைமறைவான ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.
தேனியில் ரூ.7.75 லட்சம் நகை கொள்ளை
தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி தனியார் மில் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7.75 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை அல்லிநகரம் போலீசார் தேடி வருகின்றனர்.