ADDED : மார் 07, 2024 12:10 AM
சென்னை:'புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு காரணமானவர்களுக்கு, அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சை பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு, கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு, சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
அதிகபட்ச தண்டனை என்பது, துாக்கில் போடுவது தான்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்குவதாக, பிப்ரவரி 2ல் விஜய் அறிவித்தார். அதன்பின், அரசியல் நடவடிக்கைகள், பொது பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து, எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
முதல் முறையாக, புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து, அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

