பணம் அல்லது நிலத்தை கொடு தி.மு.க., அரசுக்கு மா.கம்யூ., கெடு
பணம் அல்லது நிலத்தை கொடு தி.மு.க., அரசுக்கு மா.கம்யூ., கெடு
ADDED : ஆக 05, 2025 03:51 AM

கோவை: 'கோவை பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காவிட்டால், பல்கலையில் காலியாக உள்ள இடத்தை, கொடுக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு மா. கம்யூ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலை அமைப்பதற்கு, 40 ஆண்டுகளுக்கு முன் நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இழப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து, கோவை கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் தலைமை வகித்த மா. கம்யூ., மாநில செயலர் சண்முகம் கூறியதாவது:
பாரதியார் பல்கலை அமைக்க, கடந்த 1977 முதல், 1986 வரை விவசாயிகளிடம் இருந்து, நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு, கோவை நீதிமன்றம், 2007ல் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து, 60 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, 2022ல் உத்தரவிட்டது.
உடனே, அப்போதைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடியை சந்தித்து, இழப்பீட்டு தொகையை வழங்குமாறு வலியுறுத்தினோம். அவர், 'நிதி இல்லை' என மறுத்து விட்டார்; முதல்வரிடம் கேட்டும் பயனில்லை. தீர்ப்பை அமல்படுத்த, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலம் கொடுத்த விவசாயிகள், 45 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
தி.மு.க., அரசு, விவசாயிகளுக்கு உடனடியாக, இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள நிலங்களை, திருப்பிக் கொடுக்க வேண்டும்.இதுவே, விவசாயிகள் சார்பாக, அரசுக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.