'மகளிருக்கு 50 மாத நிலுவை தொகை ரூ.50,000 கொடுங்கள்' : அண்ணாமலை
'மகளிருக்கு 50 மாத நிலுவை தொகை ரூ.50,000 கொடுங்கள்' : அண்ணாமலை
ADDED : ஜூலை 25, 2025 03:38 PM
சென்னை: 'தமிழக பெண்கள் தி.மு.க., அரசின் மீது கொண்டிருக்கும் அதிருப்தி குறைய போவதும் இல்லை; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது, அனைத்து மகளிருக்கும், 1,000 ரூபாய் வழங்குவோம் என, போலி வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு தி.மு.க., வந்தது. ஆட்சிக்கு வந்த பின், பலமுறை சுட்டிக் காட்டிய பிறகே, இரு ஆண்டுகள் கழித்து, 2023 செப்டம்பரில் தான் அந்த திட்டத்தை அமல்படுத்தியது.
அதிலும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே, 1,000 ரூபாய் என கூறி, தி.மு.க., அரசு ஏமாற்றியது. இதனால், மகளிர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது, அடுத்த தேர்தல் வர இருப்பதை உணர்ந்து, அனைத்து மகளிருக்கும், 1,000 ரூபாய் கொடுக்க உள்ளதாக விளம்பர பணிகளை தி.மு.க., அரசு துவக்கி உள்ளது.
முன்பு தகுதியில்லை என நிராகரித்த நிலையில், தற்போது மட்டும் எப்படி தகுதி வந்தது என, சகோதரியர் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் மீது, மகளிரின் அதிருப்தி குறையப் போவதும் இல்லை; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. உண்மையிலேயே உதவித்தொகை வழங்க விரும்பினால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து விடுபட்ட, 50 மாத நிலுவை தொகையான 50,000 ரூபாயை முதலில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.