ADDED : அக் 03, 2024 11:04 PM
சென்னை:'பதிவு முடிந்த அதே நாளில் பத்திரங்களை வழங்க வேண்டும்' என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு முடிந்தும் பத்திரங்களை திருப்பித் தராமல் நிலுவையில் வைக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. பதிவுத் துறை வகுத்த காலவரம்பை, சார் - பதிவாளர்கள் மதிப்பதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.
சீராய்வு கூட்டம்
இது குறித்து, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னையில் நேற்று நடந்த சீராய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்பின், 'பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே சம்பந்தப்பட்ட பத்திரத்தை, உரியவர்களுக்கு வழங்க வேண்டும். நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்களின் நிலவரம், அதற்கான காரணம் குறித்து மேலதிகாரிகளுக்கு சார் - பதிவாளர்கள் தகவல் அளிக்க வேண்டும்' என, அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார்.
பிரதிகள்
இதேபோன்று, 'வில்லங்க சான்றிதழ், சான்றிடப்பட்ட நகல் பத்திரங்கள் கோரி விண்ணப்பித்தோருக்கும் உடனடியாக பிரதிகளை அனுப்ப வேண்டும். சார் - பதிவாளர் அலுவலகத்தில் இப்பணிகள் முறையாக நடக்கின்றனவா என்பதை, மேலதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நடப்பு நிதிஆண்டில், செப்டம்பர் இறுதி வரை பத்திரப்பதிவு வாயிலாக, 10,097 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 8,976 கோடி ரூபாய் வசூலானது.
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில், செப்., வரையிலான காலத்தில் 1,121 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகியுள்ளதாக, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.