தி.மு.க., கட்டளையை ஏற்று பா.ம.க.,வை ஜி.கே.மணி உடைக்கிறார்: பாலு புகார்
தி.மு.க., கட்டளையை ஏற்று பா.ம.க.,வை ஜி.கே.மணி உடைக்கிறார்: பாலு புகார்
ADDED : டிச 08, 2025 06:14 AM

சென்னை: ''பா.ம.க.,வின் தேர்தல் பயணத்தை, ஜி.கே.மணியை பயன்படுத்தி, தி.மு.க., திசை திருப்ப முயற்சிக்கிறது,” என பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டினார்.
பா.ம.க.,வில் அன்புமணி தரப்பைச் சேர்ந்த பாலு, நேற்று, சென்னையில் அளித்த பேட்டி:
பா.ம.க., தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரங்களை பார்க்காமல், தங்களுக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் தரப்பினர் கொண்டாடுவது கோமாளித்தனம். 'இரு தரப்புக்குமே மாம்பழச் சின்னம் இல்லை,' என சொன்னதாக கூறி, அதை வெற்றியாக கொண்டாடுகின்றனர்.
ஆனால், 'வரும் 2026 வரை, பா.ம.க., தலைவராக அன்புமணி தொடரலாம்' என்ற தேர்தல் கமிஷன் முடிவை, 'தவறு' என நீதிமன்றம் எங்குமே சொல்லவில்லை. எங்கள் அதிகாரத்தை பறிப்பதாகவோ, அவர்களிடம் அதிகாரத்தை கொடுப்பதாகவோ, தீர்ப்பில் எதுவும் இல்லை.
ராமதாஸ் தரப்பினர், தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க, சிவில் கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வர வேண்டும் என்று தான் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர் தரப்பினரால், எங்கும் வெற்றி பெற முடியாது.
தேர்தலுக்காக, நாங்கள் பணியாற்றி வருவதை திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு, தி.மு.க.,வே காரணம். ராமதாஸ் தரப்பை சேர்ந்த ஜி.கே.மணி, குறுஞ்செய்திகள் வாயிலாக, தி.மு.க., வழங்கும் கட்டளைகளை நிறைவேற்றி வருகிறார். பா.ம.க.,வை உடைக்கும் வேலையை அவர் மேற்கொள்கிறார். அது, ஒரு போதும் நடக்காது.
இவ்வாறு பாலு கூறினார்.

