ADDED : டிச 27, 2025 07:19 AM

சென்னை: பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை, கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சி தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். தந்தையிடம் இருந்து தன்னை பிரித்தது, ஜி.கே.மணி தான் என்றும், அவர் தி.மு.க.,வின் கைக்கூலி என்றும் அன்புமணி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், மணியை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக, பா.ம.க., வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க.,வைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ., - ஜி.கே.மணி, கட்சி நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரை, அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த 18ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. எனவே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கலாம் என, பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று, மணியை அடிப்படை உறுப்பினரில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார். அவருடன் பா.ம.க.,வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

