ADDED : ஏப் 20, 2025 02:05 AM

கோவை:'கொடிசியா' சார்பில், 'பில்டு இன்டெக்- - 2025' கண்காட்சி கோவையில் நடக்கிறது. இதில், டி.எம்.டி., முறுக்குக் கம்பிகளுக்கு மாற்றாக, கண்ணாடி இழைக்கம்பிகளை பயன்படுத்தும் தொழில்நுட்பம், பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
ஜி.எப்.ஆர்.பி., எனப்படும் இந்த கண்ணாடி இழைக்கம்பிகள், எடை குறைவானவை. இரும்பைவிட, 2 மடங்கு இழுவிசை வலிமை கொண்டவை. இவற்றை பயன்படுத்துவதால், கட்டுமான செலவில், 30 முதல் 40 சதவீதம் வரை சேமிக்க முடியும்.
இதுதொடர்பாக, இந்த கண்ணாடி இழைக்கம்பிகளை உற்பத்தி செய்யும், கோவை அல்ட்ராபார் டெக்னிக்ஸ் நிறுவன துணைத்தலைவர் ராகவேந்திரா கூறியதாவது:
டி.எம்.டி., முறுக்குக்கம்பிகளை எடை கணக்கிலும், மீட்டர் அளவிலும் வாங்குவர். ஜி.எப்.ஆர்.பி., கண்ணாடி இழைக்கம்பிகளை மீட்டர் கணக்கில் மட்டுமே வாங்க முடியும். இவற்றை பீம், காலம் ஆகியவற்றில் பயன்படுத்த முடியாது.
அதேசமயம், பெல்ட்பீம் கான்கிரீட், லிண்டல், பால்கனி, பார்க்கிங், சுற்றுச்சுவர், தண்ணீர்த்தொட்டி, செப்டிக் டேங்க், தளம் ஆகியவற்றிலும், சாலை, பாலம், சாலைத் தடுப்புகள், மெட்ரோ சுரங்கப்பாதை, ப்ரீ காஸ்ட் கான்கிரீட், நீச்சல் குளம் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
இவற்றை, சுருட்டிக்கூட எடுத்துச் செல்லலாம். மின்சாரத்தைக் கடத்தாது, காந்தத்தால் ஈர்க்கப்படாது. கண்ணாடி இழைக் கம்பிகள், 80 ஆண்டுகள் வரை துருப்பிடிக்காமல் இருக்கும். எளிதில் துண்டாக்க முடியும்.
ரசாயன, அமில பாதிப்பு எதிர்ப்புத் தன்மை கொண்டது. எடை குறைவு என்பதால், கட்டுமானப் பணி துரிதமாக முடியும். இரும்போடு ஒப்பிடுகையில், வெப்பத்தை அரிதில் கடத்தும் திறன் என, ஏராளமான பயன்கள் உள்ளன.
கோவை சூலுாரில் உற்பத்தி செய்கிறோம். இதைத் தயாரிக்கும்போது கார்பன் உமிழ்வு குறைவு. எனவே, சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சீரான விலை!
பாலிமர் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் இந்த கண்ணாடி இழைக்கம்பியின் விலை, ஆறு மாதங்களாக பெரிய அளவில் மாற்றமின்றி தொடர்கிறது.
இந்த கம்பிகள் 4, 6, 8, 10, 12, 16 மி.மீ., என்ற அளவில் கிடைக்கின்றன. மீட்டர் 6 முதல் 88 ரூபாய் வரை விற்பனையாவதாக ராகவேந்திரா தெரிவித்தார்.

