ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!
ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!
ADDED : ஜன 27, 2025 03:43 PM

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஞானசேகரன் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யார் அந்த சார் என்ற சந்தேகத்தை முன் வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தது.
பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரின் பின்னணியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. ஜன.19ம் தேதி ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரணைக்கு உட்படுத்திய போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் விசாரணை தொடர்ந்தது.
இந் நிலையில் அவரின் 7 நாட்கள் போலீஸ் காவல் இன்று (ஜன.27) முடிவடைந்தது. ஞானசேகரனை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்தனர். ஆனால் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
வாந்தி, மயக்கம் காரணமாக அங்குள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஞானசேகரனுக்கு மருத்துவர்கள் சிகிக்சை அளித்து வருகின்றனர். அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.