5 அடி மரக்கன்று வாங்க ஆந்திரா போகணுமா? அதிகாரிகளிடம் அமைச்சர் வேலு கேள்வி
5 அடி மரக்கன்று வாங்க ஆந்திரா போகணுமா? அதிகாரிகளிடம் அமைச்சர் வேலு கேள்வி
ADDED : பிப் 08, 2025 12:34 AM

சென்னை:“நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு, 5 அடி மரக்கன்றுகளை வாங்க ஆந்திரா செல்லாமல் இங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும்,” என அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டார்.
தமிழக நெடுஞ்சாலை துறை பராமரிப்பில், 66,000 கி.மீ., சாலைகள் உள்ளன. கிராமங்களை தாலுகா தலைமையகங்களுடனும், நகரப் பகுதிகளை மாவட்ட தலைநகரங்களுடனும் இணைக்கும் வகையில், இச்சாலைகள் அமைந்துள்ளன.
மரக்கன்று
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு செல்வதற்கான இணைப்பு சாலைகளாகவும், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.
சாலை விரிவாக்கம், மேம்பாலம், உயர்மட்ட பாலம் உள்ளிட்டவை கட்டும் பணிகளுக்காக, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த ஏராளமான மரங்கள் அகற்றப்பட்டுஉள்ளன. இதனால், சாலைகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
எனவே, மாநில நெடுஞ்சாலைகளில் பசுமை சூழலை ஏற்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை கவனம் செலுத்தி வருகிறது. கடந்தாண்டு, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
சிறிய கன்றுகளை நடுவதால், அவற்றை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் சிக்கல் எழுகிறது. எனவே, 5 அடி உயரமுள்ள, ஆண்டு முழுதும் நிழல் தரும் மரக்கன்றுகள் மட்டுமே நட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், இதுபோன்ற மரக்கன்றுகள் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
எனவே, ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களில் உள்ள தோட்டக்கலை பண்ணைகளுக்கு சென்று, மரக்கன்றுகளை வாங்கி வந்து நடும் சூழல் உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்வது, மழையால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்துவது, பட்ஜெட் அறிவிப்புக்கு புதிய திட்டங்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில், அமைச்சர் வேலு தலைமையில் நடந்தது.
இதில், துறை செயலர் செல்வராஜ், தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நல்ல முடிவு
அப்போது அமைச்சர் வேலு கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில் நடுவதற்கு, 5 அடி மரக்கன்றுகளை வாங்க, ஆந்திராவுக்கு தான் செல்ல வேண்டுமா; எவ்வளவு நாட்கள் தான் இப்படி செல்லப் போகிறோம்?
தமிழகத்தில் வனத்துறை, தனியார் நிறுவனங்கள் அல்லது நெடுஞ்சாலைத்துறை வாயிலாகவே, இதுபோன்ற 5 அடி உயர மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள், தமிழகத்திற்கு தான் அதிகளவில் பயன்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்வதால், அரசுக்கு செலவு குறையும். போக்குவரத்தின் போது மரக்கன்றுகள் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுரை கூறினார்.