கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை
கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை
UPDATED : நவ 09, 2025 10:32 PM
ADDED : நவ 09, 2025 03:56 PM

பனாஜி: கோவாவில் நடந்த 'அயர்ன்மேன் ' போட்டியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்தினார்.
கோவாவில் கடந்த பல ஆண்டுகளாக அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. இது நீச்சல் (1.9 கிமீ), சைக்கிள் ஓட்டுதல் (90 கிமீ) மற்றும் ஓட்டப்போட்டி(21.1 கிமீ) ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான சர்வேதேச விளையாட்டு நிகழ்வு ஆகும். இந்தப் போட்டி பல சர்வதேச வீரர்கள் உட்பட சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு நடக்கும் போட்டியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார்.
இதில், 1.9 கி.மீ., தூர நீச்சல் போட்டியில் அண்ணாமலை 55:20 நிமிடங்களில் கடந்தார்.
இதனைத் தொடர்ந்து 90 கி.மீ., தூரம் சைக்கிள் போட்டியில் பந்தய தூரத்தை 3:14:33 மணி நேரத்தில் கடந்தார். 21.1 கி.மீ., தூர ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து முடித்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 8 மணி நேரம் 13 நிமிடங்களில் அண்ணாமலை கடந்தார்.
இந்த போட்டியில் அண்ணாமலை பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
பாஜ எம்பியும் பங்கேற்பு
அதேபோல், பாஜ எம்பியும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யாவும் கோவா அயர்மேன் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்றார்.
பிரதமர் வாழ்த்து
அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு: கோவாவில் நடந்த அயர்ன்மேன் பந்தயத்தில் நமது இளைஞர்கள் பங்களிப்பதை பார்க்க பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இது போன்ற நிகழ்வுகள் 'FitIndia' இந்தியா இயக்கத்துக்கு பங்களிக்கின்றன. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
கோவாவில் நடந்த 'அயர்ன்மேன்' டிரையத்லானை பாஜ நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் வெற்றிகரமாக முடித்ததை பார்த்ததில் மகிழ்ச்சி.
இவ்வாறு அந்தப்பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
அண்ணாமலை நன்றி
அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவு;
என் அன்புக்குரிய பிரதமர் மோடி, பிட் இந்தியா என்ற இயக்கத்தின் மூலம் நமது நாட்டின் இளைஞர்களின் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.
உங்கள் தலைமையின் கீழ், உடற்பயிற்சி ஒரு தேசிய இயக்கமாக மாறி உள்ளது. ஆரோக்கியமான மற்றும் வலுவான பாரதம் என்ற நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் இந்த இயக்கம் ஒன்றிணைக்கிறது.
உங்களின் உத்வேகத்திற்கு நன்றி கூறுகிறோம். மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த பயணத்தில் எங்களின் சிறு பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

