தங்கம் தினமும் தொடுகிறது உச்சம்: விலையை எண்ணி மக்கள் அச்சம்
தங்கம் தினமும் தொடுகிறது உச்சம்: விலையை எண்ணி மக்கள் அச்சம்
ADDED : ஏப் 13, 2025 01:42 AM

சென்னை: தமிழகத்தில், ஆபரண தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் நேற்று சவரன், 70,160 ரூபாயாக அதிகரித்துள்ளது. தினமும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி வருவது, பல தரப்புக்கும் கவலையுடன் கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது, அந்நாட்டு அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால், பல நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,745 ரூபாய்க்கும், சவரன், 69,960 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.
வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 8,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 70,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 110 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்தாண்டு ஜன., 1ல் தங்கம் சவரன், 57,200 ரூபாய்க்கும், இம்மாதம் 5ம் தேதி, 64,480 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களில் சவரனுக்கு, 12,960 ரூபாயும்; கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 5,680 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு தங்கம் விலை மிக குறைந்த கால கட்டத்திலேயே, மிகவும் அதிகரித்து வருவது இதுவே முதல்முறை.
இது, தங்க நகை வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, தன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இம்மாதம், 2ம் தேதி முதல் வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
திடீரென அந்த அறிவிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சீனாவுக்கு மட்டும் வரி விதிப்பு தொடரும் என்றும், டிரம்ப் அறிவித்தார். இதனால், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்தது.
அமெரிக்க வரி விதிப்பால் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் வரும் என்று கணித்து, பெரிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். அமெரிக்காவுக்கு அடிபணிந்து, பெரும்பாலான நாடுகள், வரி விதிப்பை சமரசமாக முடித்து கொள்வது என, அந்நாட்டை அணுகின.
இதனால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை நோக்கி சரிந்தன. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த, 7ம் தேதி சர்வதேச சந்தையில், 2.57 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட, 'அவுன்ஸ்' அதாவது, 31.10 கிராம் எடை உடைய தங்கம் விலை தற்போது, 2.78 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனால், நம் நாட்டிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
***