சவரனுக்கு ரூ.1,040 உயர்வு ஒரே நாளில் ரூ.76,000த்தை தாண்டியது தங்கம் விலை
சவரனுக்கு ரூ.1,040 உயர்வு ஒரே நாளில் ரூ.76,000த்தை தாண்டியது தங்கம் விலை
ADDED : ஆக 30, 2025 06:49 AM

சென்னை; தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 1,040 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 76,280 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இது, நகை பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக, தங்கம் விலையில், ஏற்ற இறக்கம் உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,405 ரூபாய்க்கும், சவரன், 75,240 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 130 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 9,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 75,760 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 131 ரூபாய்க்கு விற்கப்பட்டது. திடீரென நேற்று மதியம் மீண்டும், தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 9,535 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 76,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
கடந்த ஜூலை 29ல், தங்கம் விலை சவரன் 73,200 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு, 3,080 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயராமல், அதே விலை நீடித்த போதிலும், நம் நாட்டு சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருப்பதற்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததே காரணம். இது, உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளது,'' என்றார்.