ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது: முதலீடுகள் திசை திரும்பியதன் விளைவு
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது: முதலீடுகள் திசை திரும்பியதன் விளைவு
UPDATED : நவ 13, 2024 12:19 AM
ADDED : நவ 12, 2024 11:39 PM

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,080 ரூபாய் குறைந்தது. தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வந்த உலக முதலீட்டாளர்களின் கவனம் திசை திரும்பியதே, இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள், வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால், உலக அளவிலான முதலீட்டாளர்கள், கடந்த மாதத்தில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தனர்.
அதிகரித்தது
இதனால், உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் விளைவாக, நம் நாட்டிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், அக்டோபர், 29ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 59,000 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. அதற்கு அடுத்த நாள் சவரன், 59,520 ரூபாயாக அதிகரித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. அதில், டிரம்ப் வெற்றி பெற்று, அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
அவர் அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த இருப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, உலக முதலீட்டாளர்கள் தங்கம் தவிர்த்து, 'டாலர்' உள்ளிட்ட முதலீட்டு திட்டங்களில் அதிக முதலீடு செய்கின்றனர்.
இதனால், உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 7,220 ரூபாய்க்கும்; சவரன், 57,760 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 102 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 135 ரூபாய் குறைந்து, 7,085 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,080 ரூபாய் சரிவடைந்து, 56,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நம்பிக்கை
வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் குறைந்து, 100 ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதம், 1ம் தேதி சவரன் தங்கம், 59,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த 11 நாட்களில் மட்டும் சவரனுக்கு, 2,400 ரூபாய் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
உலகளவில் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால், அதில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்கின்றனர். அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், 'உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்' என, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால், உலகளவில் தொழில்கள் சிறப்பாக நடக்கும் வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, தொழில்துறை பங்குகள் நல்ல லாபம் ஈட்டித் தரும் என்ற நம்பிக்கையால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகள், டாலர், 'கிரிப்டோ கரன்சி' போன்றவற்றில், அதிக முதலீடு செய்து வருகிறனர்.
தற்போது, தங்கத்தின் மீதான முதலீடு சற்று குறைந்துள்ளது. இதனால், உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை குறைந்து வருகிறது. இன்னும் இரு வாரங்களுக்கு இந்த நிலை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

