ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்தது
ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்தது
ADDED : டிச 13, 2025 01:06 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 2,560 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் சவரன், 98,960 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ஏழு ரூபாய் உயர்ந்து, 216 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், இந்த ஆண்டில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
எனவே, சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்ததால், நம் நாட்டிலும் அதன் விலை புதிய உச்சங்களை எட்டி வந்தது.
உச்சம்
தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, கடந்த அக்டோபரிலேயே, 95,000 ரூபாயை எட்டியது. அம்மாதம், 21ம் தேதி தங்கம் சவரன், 97,600 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தாலும், உச்சத்தை எட்டவில்லை. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம், தங்கம் கிராம், 12,050 ரூபாய்க்கும், சவரன், 96,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 209 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 12,250 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 98,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஆறு ரூபாய் அதிகரித்து, 215 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 12,370 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் அதிகரித்து, 98,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 216 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும், தங்கம் சவரனுக்கு அதிரடியாக, 2,560 ரூபாய் உயர்ந்தது. இன்று, தங்கம் சவரன் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
குவியும் முதலீடு
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அமெரிக்காவின் மத்திய வங்கியான, 'பெடரல் வங்கி' வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்திருப்பதுடன், பல்வேறு நாடுகளில் உள்ள, மத்திய வங்கிகள், தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.
சர்வதேச முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள், தங்கமாகவே உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது.
இது போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து, நம் நாட்டிலும், அதன் விலை அதிகரித்து வருகிறது. வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

