ADDED : ஆக 08, 2025 12:57 AM
சென்னை:தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரன் விலை, 75,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9,380 ரூபாய்க்கும், சவரன், 75,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி, 126 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 9,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 75,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 127 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
பல்வேறு நாடுகளில், பங்கு சந்தை சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதிப்பை, அமெரிக்கா தீவிரமாக கடைப்பிடிக்கும் பட்சத்தில், உள்நாட்டு சந்தையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.