எகிறியது தங்கம் விலை கிராம் ரூ.7,000; சவரன் ரூ.56,000
எகிறியது தங்கம் விலை கிராம் ரூ.7,000; சவரன் ரூ.56,000
ADDED : செப் 25, 2024 01:24 AM
சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, ஆபரண தங்கம் விலை கிராம், 7,000 ரூபாய்க்கும், சவரன் 56,000 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை உயர்ந்தது. இந்த சூழலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள், சமீபத்தில் வைப்பு நிதிக்கான வட்டியை, 0.25 சதவீதம் குறைத்தன.
இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வால், நம் நாட்டிலும் அதன் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,980 ரூபாய்க்கும், சவரன் 55,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து முதல் முறையாக, 7,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 56,000 ரூபாயை எட்டியுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
பல நாடுகள் இடையே நிலவும் போர் பதற்றத்தால், முதலீட்டாளர்களுக்கு பங்கு சந்தை உள்ளிட்ட முதலீட்டு திட்டங்களின் மீது நம்பிக்கையில்லை. இதனால், அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், உலக சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவுன்ஸ் தங்கம் விலை, 100 டாலர் உயர்ந்து, 2,630 டாலரை எட்டியுள்ளது. நம் நாட்டில் தங்கம் கிராம் முதல்முறையாக, 7,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்து இருக்கும்.
இவ்வாறு கூறினார்.